ஒற்றையடிப்பாதையின் மேலே
வாசனைப்பறவைகள் தாழப்பறக்கையில்
நறுமணத்தின் தற்காலிக சிறுமேகம்
குடையாய் கவியும்
இசைவாய் எல்லாம் மயங்கும்
ஒரு கணத்தில்
கிறங்கும் கண்படலத்தில்
வர்ணமாய் துலங்கும்
சுகந்தத்தின் நூலிழைகள்
அதீதங்களுக்கு இடையாடும்
தூரியென்று மாறிவிட
கதகதப்பு பூண்டுவிட்ட
இருதயப் புல்வெளியில்
பூனையின் பாதம் வைத்து
நகரும் வாசனைகளை மலர்த்தும்
பறவைகள் போகும்
திசைநோக்கியே நீள்கிறது
ஒற்றையடிப்பாதை.
No comments:
Post a Comment