Apr 13, 2015

புத்தனின் முப்பது வயது ஆண்குறி

இன்று
முதுகெலும்பற்ற ஆண்குறி
புழுவைப்போல் தொங்கிக்கொண்டிருக்கிறது
இன்னும்
மிச்சமிருக்கும் வாலிபத்தின்
ஆரம்ப வசந்தங்களில்
எல்லா அதிகாரங்களின் கயமையை
கொண்டிருந்த
அது விறைத்திருக்கும்போது
பைத்தியம்
நான் வாளேந்தியிருந்ததாகவே நினைத்திருந்தேன்
ஆனால் காமம்
தசையை விட
அதன் நிழல்களிலிருக்கிறது
என்பதை அறியத்துவங்கியபோது
அதற்கு எலும்புமில்லையென்பதை
நானும் அதுவும் அறிந்துகொண்டோம்
புழுவானது நாகத்தைப்போல் சீறும்போது
அதன் துயர்களை
ஏந்திக்கொள்ளும்
ஆற்றுப்படுத்தும்
யோனியின் தாய்மை
என் கண்களிலிருந்து விரியும் உலகில்
எங்குமேயில்லை
கனவு மைதுனங்கள் சலித்துவிட்ட
நேற்றைய இரவின்
பெளர்ணமி ஒளியில்
என் ஆண்குறியை
ஒரு கிடாராக மாற்றும்போது
இந்த உலகில் உடல்கள்
தசைகளால் படைக்கப்படவேயில்லை என்பதே
என் ஞானமாக இருந்தது.

No comments: