Apr 13, 2015

புலிக்குட்டியின் கதை

ஆட்டுக்குட்டியின் குரல்
அபயத்தை யாசித்து
எதிரொலிக்கையில்
வழி தவறிய பாதைகளில்
எப்போதும் யாருமிருப்பதில்லை-அது
திசைகளை மோதிக்களைத்து
இருளை விரித்து அயர்ந்தும்விடுகிறது
பின் வரும் முதற்புலரியில்
அதற்கென்றே
தருக்கள் பூச்சொரிந்து
வனலோக ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதும்
பால் மிகுந்த கொடிகள்
வேலிகளில் படர்வதும்
நீர்த்துறை கண்படுவதும்
கசியும்
இயற்கையின் முலைப்பாலன்றி
எதுவுமல்ல- நில்!
தனிமையின் ஆதுரம்
ஒரூயிரைத் தழுவினாலும்
வழிதவறாத இன்னொன்றின்
இன்மை என்பது
நன்னம்பிக்கைகளை எரிக்கப் போதுமானதல்லவா?
வெறியில் பூச்சிகளை புழுக்களை
பிடித்துத் தின்னப் பழகுமதன்
ரோமங்கள் நீங்கி
உடல் வரிகள் வளரும்
கோடையின் வழிதவறிய பாதையில்
அபயத்தை துறந்து எதிரொலிப்பது
இப்போதொரு புலிக்குட்டியின் உர்ர்..றுமல்

No comments: