Apr 13, 2015

அகக்கூத்து

தன் புராதன அடவுகளிலிருந்து
நித்யகன்னியாய் உருமாறூகிறான் அவன்
பாவங்களின் கண்வீச்சில் திறக்கிறது
யெளவனத்தின் முடிவுறாத பாதை
பறக்கும் ராகமாகும் கம்பளத்திலேகி
வெளிப்போகிறதவள் குரல்
இசையின் விளிம்புக்குள்
தளுங்கும் உடலசைவுகள்
பெயரறியாப் பறவையுடையாதாகிறது
கூந்தலில் சொதும்பிய
அனாதி இருளில்
மின்மினிகளாகின்றன நோக்கும் கண்கள்
நுரையென்று காமமும்
கள்ளென்று காதலுமாய்
எமது உடலின்
தொனி மாறுகையில்
மீவெளியில் முடிவுறாத
களியாட்டத்தின் வர்ணங்களாய்
அசைகிறது அவள் முந்தானை
ஒளியின் இளநிறம் பாயும் வைகறையில்
ஒரு தொன்மமாய் மாறிவிடும்
அவள் நிழல்
நனவிலிச் சித்திரமாகிவிட
ஒப்பனை கலைத்து
கிழக்கே மறைகிறான்
மைதானமெங்கும் உதிர்ந்த ஒயிலை
பனி நனைக்க.

No comments: