பாறைகளாகிவிட்ட ஹிருதயங்களின் நிலத்தில்
காலங்களின் நிமித்திகன்
முதலில் உணரக்கொடுத்தது
யுகங்களிடையே நீளும்
ஊசி முனையளவு சுரங்கத்தின்
தரையிலிருந்து
எழும்பும் கங்குப் பெருமூச்சுகளை
புணர்ந்த நிலையில்
பாறைகளாகி விட்டவர்களின்
இறுதிக்கலவி குறிப்புகளை
அவன் காற்றில் வரைய
விரியும் கல்யோனியில்
மயங்கித் துலங்குவது
நிரப்பவியலா கோப்பை
மரணத்தின் தைலவண்ன ஓவியத்தில்
தலைகீழாய் அலையடிக்குமொரு குளம்-
கிளிக்குஞ்சுகளின் கார்வை-
நெளிந்து வலம்போகும் சர்ப்பம்-
மற்றுமொரு நண்டிலிருந்து
முடிவுறா பாழில் எதிரொலிக்கும்
மண்ணின் குமுறல்களை
மொழிபெயர்த்தவனிடம்
இந்த மலை
நிமித்திகங்கள் சொல்லி மரித்த
முதுபல்லியின் சவமாகிறதென்றேன்
ஏககணத்தில் நிகழ்கிறது
அவன் புன்சிரிப்பும்
பல்லியின் ஒரு அசைவும்.
No comments:
Post a Comment