Oct 26, 2024

பலூன் விளையாட்டு

காற்றே..
கரடான வெளியில்
அந்தப் பலூனை அலைகழிக்காதே
அதைப் பிடித்துவிட
சூதறியா அக்குழந்தை
விழுந்து எழுந்து தவழ்ந்தோடி
துணையற்ற
தன் தனிமைக்குள் தடுமாறுகிறது
எப்போது பலூன் வெடிக்குமென்று
யாருக்கும் தெரியாது
ஒருவேளை கிடைத்துவிட்டால்
பலூனை வெடித்துவிடாமல் விளையாட
குழந்தைக்குத் தெரியாமலுமிருக்கலாம்
ஆனாலும் அது தவிக்கிறது
ஏக்கத்தில் கோணும்
குழந்தையின் உதட்டோரத்தில்
பெருந்துயரம் மண்டுகிறது
காற்றே…
குழந்தைக்குப் பலூன் கிடைக்கவேண்டும்
இல்லையென்றால்
இந்தப் பலூனும்
குழந்தையை வெடித்து விளையாடிவிட்டு போய்விடும்.

No comments: