பந்தல்படர்ந்த கொடியின்
வாசனைநிழல் விழுந்த
உன் வாசலின்
தாழடைத்த கதவின்முன்
நள்ளென் யாமத்தில்
நானலைந்திருந்தேன்
கோபுரவிளக்கைக் கண்சுமக்க
வந்துவிழுந்த நீரற்ற நதிக்கரையில்
வெறியில் மணலள்ளி
திசைகளில் இறைத்தேன்
விண்மினுங்கிய நட்சத்திரங்களின் கீழே
பாதரசக்குமிழிரண்டு கண்நீங்கின
இழந்துகொண்டிருப்பவனின் ஊமைக்குமுறல்
நாணற்சரசரப்பிடையே போயடைய
இருளிடையே புகைவெண்மை நிறந்த
நதிமணலின் உடலாழத்தில்
கனிந்திருந்த நீர்மம்தான்
சவமென்று கிடந்தவனுக்கு
அன்பெனும் உயிர்மத்தை
காத்துவைக்கும் ரகசியத்தை
போதித்து எழுப்பியது.
No comments:
Post a Comment