தற்காலப் பிறைகளில்
பழையகாதலின் முகம் தெரிவதில்லை
ஆனாலும் நள்ளிரவுத்தாகம் போல்
அது உறக்கத்தைக் கலைத்துவிடுகிறது
அக்கணங்களில்
புள்ளினங்கள் அற்ற குளத்தின் கரைமரங்கள்
உதிர்க்கும் கண்ணீர்ச்சருகுகளாய்
நினைவுகள் சரசரக்கின்றன
ஆகப்பெரிய தராசுகளில்
தன்னை எப்போதும்
எடைமிக்கதாய் ஆக்கிக்கொள்ளும்
காலத்தின் புதிரில்தான்
நம் பழையகாதலின் எலும்புகள் மின்னுகின்றன
துயரங்களையே கொடையாகப் பெற்ற
நம் சிறிய பரிதாபகரமான இதயம்
மெல்லமெல்ல ஒரு கூழாங்கல்லாவதை
பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்
காலத்தைக் கொல்லியாக வடித்தாலும்
நித்யத்தில் படர்ந்திருக்கும்
அருகின் வேரை
அழிக்க வழியேயில்லை
அன்றாட வழித்தடங்களில்
சட்டையுரித்து வைத்திருக்கும் பழையகாதலை
நாம் கண்ணுறும்போதெல்லாம்
நெஞ்சத்துச்சுடலையில்
நாம் எரியூட்டிக்கொள்வது
நம்மையன்றி வேறொன்றுமில்லை.
No comments:
Post a Comment