நகரா நெரிசலில்
அவசர ஊர்தியின்
இறைஞ்சுதல் ஒலிக்கு
பேருந்தின் ஜன்னலோரத்தில்
பதற்றமாய் நடுங்குகிறேன்
உயிர் உள்ளிருக்கிறதா
அல்லது வெளியிருக்கிறதா?
அது இறுகப்பற்றத் துடிப்பது
வாழ்வையா மரணத்தையா?
ஊர்தியின் தலைமேல்
சுழலும் குமிழ்விளக்கு
அப்பகலை செந்நிறமாக்கும்போது
வாழ்வின் அபத்தம்
நடுச்சாலையில் தன்னை பிரசங்கிக்கிறது
நான் பிரார்த்திக்கும்போது
ஏனோ என் கண்களுக்கெதிரில்
இருட்டுநிறத்தில் ஒரு திரைச்சீலை அசைகிறது
போக்குவரத்து மொத்தமாய் ஸ்தம்பித்துவிட்ட
நாற்சந்தியில் சமிக்ஞை விளக்கு
வண்ணங்களை அர்த்தமற்று மாற்றிக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment