சுவருக்கு இந்தப்பக்கம்
உறங்கவியலாமை
உயிர்ப்பச்சையத்தை
உலர்த்திய நாட்களில்
அந்தப்பக்கம் புதிதாய்
அவர்கள் குடியேறினார்கள்
தேள் கொடுக்குகள்
கண்களை கொட்டும் இரவுகளில்
நெஞ்சுக்கூடு எரிய எரிய
சிகரெட் நெருப்பின்
நுனிக்கங்குகளால்
அதைப் பொசுக்கி
இருட்டுப்பாலையில்
சாம்பலை இறைக்கும் கணங்களில்
விளக்கெரியாத அந்தப்பக்கம்
நிசப்தமாகவே இருக்கும்
இருண்ட அறைக்குள்
ஒவ்வொரு இரவுகளையும்
விழித்திருந்து எண்ணியிருந்தவன்
அந்தப்பக்கமிருந்து
பச்சிளங்குழந்தையின் அழுகுரல்
கேட்ட இரவில்
ஓரிலை
துல்லியத்தில் அசையும்
ஓசையும் உணர்ந்தான்
தொடரிரவுகளில்
இலையசைய அசைய
அதனோடு சேர்ந்திசைகிறது
அறியாத மொழியின் தாலாட்டும்
குழந்தை இன்னும்
அழுகையை நிறுத்தாத
தற்கால இரவுகளில்
ஆழ உறக்கங்களை
அவனுக்குக் கொடுத்துவிட்டு
ஒரு உலர்ந்த இலை
தளிர்மைக்குத் திரும்பும்
அதிசயத்தை ஒளித்துவைத்துக்கொள்கிறது
அப்பாடல்.
No comments:
Post a Comment