பழந்துயர்களை நினைவூட்டும்
நியான் விளக்கின்
கசியும்
மஞ்சள் ஒளி வழி
குளிர் இறங்கும்
எட்டரை மணியிரவில்
தேனீர்கடையின் வாசலோரம்
உடைத்துப்போட்ட
பிஸ்கட்துண்டுகளின் முன்
துருத்தும் எலும்புகளின் மேல்
ப்ரவுன் நிறத்தோல் போர்த்தப்பட்டு
சப்தங்களுக்கு வெகு தொலைவில்
மெலிதாய் துடிக்கும் பிரக்ஞையோடு
சுருண்டிருக்கிறது நாய்க்குட்டி
இயலாமையின் துயரக்கோபத்தில்
நான் காலத்தை ஏசுகையில்
சிரமத்தோடு தலையுயர்த்தி பார்த்துவிட்டு
நாய்க்குட்டி கவிழ்ந்துகொள்கிறது
நானென்ன செய்வேனென முனகிக்கொண்டே
காலம்
மறைகிறது
மாநகருக்குள்.
No comments:
Post a Comment