Apr 13, 2015

மின்மினி பார்த்தல்

மின்சார விளக்கெரியும் அறைக்குள்
எப்படி கண்களுக்கெதிரில்
மின்மினிகள் பறக்கிறதென்பதைச் சொல்ல
இக்கணம் எனக்கு
யாருமில்லை அருகில்

நான் நடுங்குகிறேன்
காலம் உமிழ்ந்த புன்னகைகள்
நம்மைப் போர்த்துவதில்லை
நட்சத்திரங்களை
அசையாமல் வைத்திருக்கும்
இரவின் மேல் சிதறும்
அரற்றலும் இறைஞ்சுதலும் நிலம்படுகின்றன
எரிந்த மீன்களாய்

பயம் நீள்கிறது பாலையாய்
மணற்துகள்கள் தீப்பிடித்து எரியும்போது
சந்தியகால ரகசியங்கள்
மண் எழுதும் சிருஷ்டித்தனிமையில்
மின்மினிகளின் ஒளிவெளியில்
என் பெளதீகத்தின்
துயரக் குறுக்கிடலை நினைத்து
எழுந்தடங்குகிறது ஊமைக்குமுறல்

ஒளியுமிழாத இந்த உடலை
இரவு தன் சவப்பெட்டிக்குள்
புதைத்துக்கொண்டுவிட்டால்
பிறகு பறக்கும் மின்மினிகளை
மண்ணை மேற்துளைத்துப்
பார்த்துக்கொண்டிருப்பேன் நிம்மதியாய்.

No comments: