Apr 22, 2015

துயரம் என்னும் செல்லக்குட்டி

இந்த செல்லக்குட்டியை நான் தேர்ந்தெடுக்கவில்லை
அதுதான் எனக்கு விதிக்கப்பட்டிருந்தது
பால்மணப் பருவத்தில் அதன் முதற்கீறல்கள் சில
மறையாத் தழும்புகளாக மாறின
நான் வாழ்வுக்குள் நுழைந்தபோது
இதேவகை செல்லக்குட்டிகள்
பலருடைய தலைகளிலேயே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்
சற்றே அச்சத்தோடு திரும்புகையில்
இது எங்கோ ஓடியிருந்தது
இடையில் சிலகாலம்
மகிழ்வின் செல்லக்குட்டிகளோடு
சுகமாய் சயனித்திருக்கையில்
திடீரென்று எதிரே குதித்து
அவற்றைக் குதறிக் கொன்றது
அப்படித்தான் அதன் இயல்பு
வரும் போகும்
முரட்டுச்செல்லம் கொஞ்சும்
முதுகில் குத்தும் முகத்தில் அறையும்
கண்ணீரைக் கேட்கும்
குன்றாத இளமைக்கு வரம் வாங்கியிருக்கும்
அதனுடன் போராடியதில்
திரண்ட நரையின் வெளிச்சத்தில்
இப்போது நான்
புதிர்களுக்கு வெளியே வந்துவிட்டேன்
ஹோய்… ஹோய்…
இதோ என் செல்லக்குட்டியின் மேலேறி
குதிரைச்சவாரி போகிறேனே

No comments: