Apr 22, 2015

பூக்கும் மலரின் கணிதம்

வெயில் கனலும் இளமதியத்தில்
வாசற்பந்தலின் நிழலெங்கும்
மல்லிகைகள் உதிர்கின்றன
வாழ்க்கையை விட்டத்திலிருந்து வீசியெறிந்து
மரித்துப்போன சகவுயிரின்
துர்மரண வீச்சம்
இன்னும் முற்றாகக் கழுவப்படாத வீட்டில்
ஆற்றாமையின் புகைமூட்டத்தில்
கனல்கிறது துயரம்
கூரையமர்ந்து கரையும்
காகத்தின் நிறத்திலிருந்து
கிரகண இருள் சூழும்
அத்தற்காலிகத்தின் கணங்களில்
வலியின் பெருங்கடல்
ஓயாது அலைவீசுகிறது
நிலமெங்கும் வேறுவீடுகளில்
யார் யாரோ எதனெதனாலோ
அகாலத்தில் மறைந்துவிடுகிறார்கள்
அவர்களுக்கும் சேர்த்தே துயரம் அனுசரிக்கும்
இந்தத் துர்நனவுக்காலத்தின்
விடியலில் விழியுயர்த்துகையில்
பந்தலெங்கும் புதிய மொக்குகள்
காண மறந்த கணத்தில்
ரகசியமாய் மலர்ந்துவிட்டிருக்கின்றன.

No comments: