Apr 22, 2015

காமம் மற்றும் மரணம்

காமம் மற்றும் மரணம்
புதிதாய் துலங்கும்
மிகப்பழைய சேதிகளவை
இன்பம் மேவிய வலி
அதுவே என் காமம்
வலி மேவிய இன்பம்
அதுவே என் மரணம்
ஆகவே அவை புதியவை
இன்பம் என்பது
காமம் தீர்ந்த மரணம்
வலியென்பது
மரணத்திலும் மீந்த காமம்
தசைத்திரள் தவிக்கையில்
லோகங்கள் அதிரச் சிரிக்கும்
நரம்புகளின் மண்டலத்திலிருந்து
இருகுதிரைகள் பூட்டிய
சாரட் வண்டியொன்று கிளம்புகிறது
ஒன்று யோனிகளின் திசை நோக்கியும்
இன்னொன்று கல்லறையின் திசையிலும்
பறக்க இழுக்கின்றன
ஆம்!
அவற்றிற்குத் தெரிந்திருக்கிறது
காமம் என்பது
கல்லறை வடிவிலான யோனி
மரணம் என்பது
யோனி வடிவிலான கல்லறை
துரதிரஷ்டம்
வண்டியின் சக்கரங்கள்
நீதியின் சேற்றுக்குள் புதைந்திருக்கின்றன.

No comments: