Apr 22, 2015

அன்னையர் கண்ணீர்

அன்னை அழுகிறாள்
ஒரு கண்ணீர்த் துளி
அர்த்தமற்று உருவாவதில்லையென்பதால்
அவள் கண்ணீர்த்துளிகள்
தம் காரணங்களைக் கேவிக்கொண்டே
உதிர்கின்றன
வாழ்வின் அர்த்தக்குலைவுகளை
பொருத்தமற்ற காலத்தில்
அவள் காண நேர்ந்துவிட்டது
ஒடுங்கியமர்ந்து கண்ணீர் உகுப்பவளின்
நரைத்த கூந்தலை வெறிக்கிறேன்
வற்றிய சுரப்பிகள் உடையவனான
என்னால் அழ இயலவில்லை
அற்று அர்த்தம் தரும்
சில பூஞ்சையான ஆறுதல்களும்
சொல்லிடுக்குகளில் கிடைக்கவில்லை
அவளுக்கொரு புன்னகையை
வரவழைத்துக் கொடுக்கும்
மந்திரமும் தெரியவில்லை
அவள் கண்ணீர்த்துளிகள்
உலராமல் தேங்குகின்றன
கர்ப்பத்துளி
நான் உலர்கிறேன்.

No comments: