Apr 22, 2015

இச்சை என்பது

இச்சை என்பது
ஆரத்தழுவ யாருமின்றி
இரண்டு கரங்களையும் விரித்திருத்தல்
இலையுதிர் மரத்தடியில்
நிழல் தேடுதல்
ஏதாவது நிகழுமென்று நம்புதல்
சந்தடிமிக்க நகரவீதிகளில்
பெருமெளனத்தோடு அலைதல்
எரிந்து உயிர்த்தல்
நாவு வெளிநீண்டு
கழுத்தை இறுக்குதல்
பித்தான சொற்கள்
சிலவற்றை மொழிதல்
நினைவில் அவமானத்தை தேக்குதல்
கடவுளின் நாற்காலியில்
அமர்ந்துவிட விரும்புதல்
சிலவற்றை உள்ளிடுதல்
சிலவற்றை வெளியேற்றுதல்
தன்னின் வெற்றிடத்தில் அலைந்து
தன்னோடு சமரிடுதல்
ஒரு கனியின் சாறென
பிரபஞ்சத்தை வடிக்க முற்படுதல்
தனக்கு மரணமில்லை என்று நம்புதல்
ஆண் மார்க்காம்பில்
பால் சுரக்குமென்று சொல்லுதல்
மேலும்
இச்சை என்பது
கண்ணீரின் கனம் தாங்காது
தன் கழுத்தை அறுத்து
தன் கையில் வைத்துக்கொள்ளல்.

No comments: