நமது ஏக்கம்
ஒரு வாடாத
அழகிய மலராக
இருக்கிறது
நள்ளிரவில்
நடை சார்த்தப்பட்ட
ஆலயத்தின் முன்னால்
அது கடவுளைச் சபிக்கிறது
கூட்டம் நிரம்பி வழியும்
உணவகத்திற்கு முன்னால்
அது சட்டைப்பையை
வெகுநேரம் தடவிக்கொண்டு நிற்கிறது
பின்னிரவுகளில்
கழிவறையில் குந்திக்கொண்டு
நெஞ்சடைக்கும் ஒன்றை
வெளியேற்ற முயல்கிறது
அத்தனை மனிதர்கள் சூழ்ந்திருக்க
முன்னால் நடக்கும் பெண்ணின்
இடுப்பில் தொற்றிக்கொள்கிறது
இரத்தம் உறையத்துவங்கும்
துயர மரணத்தின் முன்னால்
வாழ்வை இறுகப்பற்றிக்கொள்கிறது.
நான் சாம்பலிருந்து
தசையை வடிப்பேன்
என்று உரத்துக் கூவிக்கொண்டு
மதுப்புட்டிக்குள் அலைவீசுகிறது
வெகு தனிமையில் கண்ணீரை மட்டும்
அருந்தும் சாதகபட்சியாகவும் இருக்கிறது
ஏக்கத்தின் பூரண தினமொன்றில்
நாம் வசிக்கும
ஊருக்குள் இறங்கும் பசித்த புலி
ஏக்கத்தின் பூரண மலரை கண்ணுற்று
திரும்பி கானகத்திற்கே
பறக்கிறது மெல்ல.
No comments:
Post a Comment