சுவர்க்கம்
மறுபுறத்தில் இருக்கிறது
எனது தட்டையான உலகம்
கோட்டுக்கு
இப்புறத்தில் இருக்கிறது.
மிகப் பழகியதின் சலிப்பில்
எல்லாம் வறண்டுகிடக்கின்றன
நான் போய்விடலாம்
மறுபுறம் அடர்ந்திருக்கும் பச்சைக்கு
பொழுதுகளெங்கும் உயிர் நிலத்தில்
அலையும் கானலிலிருந்து விடுபட்டு
என் சுகக்கனவுகளிலிருந்து தட்டியெழுப்பி விடும்
அழுகுரல்களிலிருந்து தப்பித்து
தினமும் கூடிக்கொண்டிருக்கும்
ரகசியங்களின் சுமைகளை இறக்கிவைத்துவிட்டு
போய்விட்டால்
ஒரு குழந்தையைப் போல்
சீராட்டப்பட்டு
ஒரு அரசனைப் போல்
அங்கே மதிக்கப்படுவேன்
பின்புறம் இல்லாத
மறுபுற சுவர்க்கத்தை
பிரித்துக் கொண்டிருப்பதொரு
மெல்லிய கோடுதான்
என் பாதங்களும்
வலுவாகவே இருக்கின்றன.
ஆனாலும்
தட்டையான் உலகத்தை
கைவிடுவதென்பது
ஆடையைக் கழற்றுவது
போலல்ல
தோலைக் கழற்றுவது
அது.
No comments:
Post a Comment