Oct 26, 2024

இசைக்கேடான ஞானம்

கழிவறை ஓடி
காற்ச்சட்டை விலக்கி
தேய்த்தெடுத்த விரலின் நுனியில்
உன் சின்னஞ்சிறு சடலத்தை
உற்றுப்பார்க்கிறேன்
அவ்வளவு தூரம் போனதற்கு
காரணங்கள் சொல்ல ஏலாதுதான்
உருவம் சிறுத்தால்
உலகு பெரிதாகும் போல
ஒரு கணிதக்கேள்விக்கு
ஒன்றுக்கும் மேற்பட்ட விடையில்லை
என்ற தீர்க்கத்தோடு கூட
நீ போயிருக்கலாம்-அல்லது
ஏதோவொரு தத்துவக்குழப்பத்தின் புகைமூட்டத்தில்
பாதை குழம்பியிருக்கலாம்
விபத்தென்றுகூட சொல்லலாம்
இந்த நினைப்பு எல்லாம்
குரங்கு மனதின்
மூடநம்பிக்கையாகவும் இருக்கலாம்
எது எப்படியாயினும்
உடையுதறி அணிபவனின் கவனத்தில்
குறிபார்த்து நீ கொட்டினாய்
வீங்கிக்கடுத்த வலியின் ஞானத்தில்
உன் உயிரற்ற உடலோடு
நிர்வாணத்தை அடைந்துவிடும்
நப்பாசையையும் சேர்த்தே
நான் கழுவியாயிற்று.

No comments: