ஆத்மாநாம் இருந்த
மருத்துவமனையைக் கடக்கும்போதெல்லாம்
அந்த மரங்களில்
இலைகள் அசைகின்றன.
நீண்ட மதிற்சுவரின் ஓரத்தில்
புதிதாய் பற்றவைத்த சிகரெட்டோடு
இலைகளை வெறிக்கின்றேன்
என் உடலுக்குள்
குதிரைகளைப் போல்
நரம்புகள் தறிகெட்டு அலைகின்றன
அவற்றை அடக்கு அடக்கு என்று
ஆத்மாநாம் இலைகளுக்குள்ளிருந்து
உரக்கக் கூவும்போது
நான் எரிந்துகொண்டிருக்கிறேன்
சூரியன் அணைந்துகொண்டிருக்கிறது
ஆத்மாநாம் அழுது கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment