Apr 13, 2015

வெண்ணிற இரவில்

எனது தந்தையார்
நானொரு பைத்தியகாரனாய்
அலைவது பற்றி துயருற்றவராய்
எனக்கொரு காதலி
இல்லையென்று புலம்பிக்கொண்டிருக்கிறார்
என்னின் கபடமற்ற புன்னகைகள்
தன் பழைய காதலிகளை
நினைவூட்டுவதாலும்
நிதம்பங்களின் மீதான அலட்சியம்
தனக்கு விடப்பட்ட சவாலாயிருப்பதாலும்
எப்போதும் பசுமை மறையாத
தன் விளைநிலத்தில்
நான் களர்மண்ணை கொட்டிக்கொண்டிருப்பதாக
உரக்கக்கூறியவாறே அலைகிறார்
நானோ அன்னையர் தெருவில்
என் தந்தையின்
முன்னைக்காதலிகள்
உதிர்த்த முதுநரைக் கூந்தலில்
கருமை மிகுந்த காலங்களை
தேடிக்கொண்டு
வெண்ணிற இரவில் திரிகிறேன்
தந்தையும் நானும்
எதிர்கொள்ளும் நிசியில்
எமது கரு நிழல்களிலிருந்து
அன்னையரும் காதலிகளும்
உரக்கச் சிரிக்க
வெகு அமைதியாய்
எமது நிழல்கள் விலகிக்கொள்கின்றன.

No comments: