ஊரின் ஆகாசம்
நீலம் பாரிக்கும் மதியங்களில்
பூட்டிய வீட்டின்
கரிந்த அடுப்போரம்
உப்பாய் நுரைத்து
பொங்கத்துவங்குகிறது
முந்தைய இரவில்
உதிர்ந்த துயரம்
கடைசியாய் சாணம்
மெழுகியது நேற்றாயினும்
என்றோ ஈசானிய மூலையில்
சிந்திய உதிரத்தின் தாரையிலிருந்து
அடர்வண்ணத்தில் சீறியெழுகிறது
செந்நிற ஊற்று
ஒரு பாதாரச கோட்டின்
புறங்களில் பெருகும்
இரு வண்ணக் குளங்களில்
கரைந்தழிவன
நிறம் திரியும் சுவர்களிலிருந்து
குழந்தைகளின் அறுபட்ட கனவுகள்
ஊரின் ஆகாசம்
செந்நிறமாகும் அந்தியில்
தாழ் நீக்குபவளின் காலிடுக்கில்
தட்டோட்டு கூரை வரை
உயர்ந்துவிட்ட குளங்கள்
நூலிழை நதிகளாய் உருக்கொண்டு
பாய்ந்து மறைய
தன் வாசனையில்
வீட்டைச் சீராக்குபவள்
அடுப்போரம் குனிந்திருக்கிறாள்
இன்றைக்கும்.
No comments:
Post a Comment