Apr 13, 2015

சகோதரிகளின் நிலம்

ஆயில்ய மலர்களின்
மணம் நிரம்பிய
சகோதரிகளின் நிலத்தில்
சூரியன் தக்காளிப்பழமாகிறான்
வேலியில் பாடலை
எழுதிய பறவைகள்
வாய்க்கால் நீரை
விரித்துப்படிக்க
நீர்ச்சொற்கள் சிதறுகின்றன
பச்சையக் குடைகளின்
பக்கவாட்டில் தளும்பும்
வெயிலின் முலைப்பால்
மண்ணின் கண்மணிகளில்
வழிந்தோடுகிறது
கிணற்றுக்குள் குளிக்க
இறங்கிய மேகங்களுக்கு
சுவர்ப்பூக்கள் தம்மைப் பரிசாக்க
நிழல்வெளியின் ஏகாந்தத்தில்
சகோதரிகள் பட்டாம்பூச்சிகளாவது
கண்டு நிற்கும்
துர்க்கனவுகள் நிரம்பிய
அவர்களின் முன்னம் அறிந்தவனிடம்
அந்தரங்கம் பகிரத்துவங்குகிறது காலம்.

No comments: