Apr 20, 2015

பகற்கனவுக் கலை

பகற்கனவுகளை நெய்ய மந்தமான வெயில் கொண்ட முற்பகல் அல்லது பிற்பகல் பொருத்தமானது.பெண்கள் இல்லாத வீட்டின் அல்லது அறையின் வாசல் ஜன்னல் கதவுகள் இறுகப் பூட்டப்பட்டு எல்லாவித ஓசைகளும் தடுக்கப்பட வேண்டும். நேற்றைய இரவின் ஒழுங்குபடுத்தப்படாத படுக்கையில் புரண்டவாறே உடலை மேலும் சோம்பலூட்டிக் கொள்வது நலம்.

இப்படியாக நாம் மெல்ல உள் நுழையும் பகற்கனவினுள் பெளதீகத்தின் சுமையில்லை.குற்றங்களை கண்காணிக்கும் கண்களும் தண்டனைகளின் அச்சவுணர்வும் இல்லை.குறிப்பாக மிக புராதன வாதைகளான பசி மற்றும் வலி இல்லை.அச்சமூட்டும் இரவின் துர்கனவுகளிலிருந்து அலறி விழிப்பது நேராது.ஒரு மாய வித்தைக்காரனைப் போல எதையும் கலைத்து அடுக்க,அடுக்கி கலக்க நம்மால் முடியும்.ஒரு பகற்கனவு என்பது நித்யத்தின் ஒரு சிறுகீற்று என்பதை மெல்ல மெல்ல நாம் புரிந்துகொள்கிறோம்.

பகற்கனவிலிருந்து வெளியேறுதல் மாலைப்பொழுதில் மலைச்சரிவில் இறங்குதலை போன்றது.அப்போது நாம் வெளியேறுதலின் ஏக்கத்தை முற்றாக தவிர்த்து விட வேண்டும்.

மேற்சொன்னவாறு இல்லாமல் எப்படிப்பட்ட சூழலிலும் குறிப்பாக இரவுகளிலும் எவ்விதமான  நோக்கங்களுக்காகவும் ஒருவர் தங்கள் விருப்பத்திற்கேற்ப பகற்கனவுகளை காணலாம்.

வெகுகாலமாக பகற்கனவுகளை பயில்பவன் என்ற முறையில் உங்களிடம் நான் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்.மரித்தவனின் மூடாத இமைகளைப் போல் நீங்கள் உங்கள் கண்களை பொருத்திக்கொள்ளும் போதெல்லாம் குற்றங் குறையற்ற ஒரு பகற்கனவு நிச்சயம் சாத்தியப்படும்.

No comments: