அன்னக்கொடி பறந்த நிலத்திலிருந்தே வந்தேன்
அனைத்துக் கொடிகளும் கீழிறக்கப்பட்டுவிட்ட
மெய்நிகர் உலகில் என் முகவரி
எழுத்திலிருந்து எண்களுக்கு மாறிக்கொண்டிருப்பதை
உருளும் காலச்சகடம் வழியே காண்கிறேன்
வரைபடத்தில் இருக்கும்
மெல்லிய கோடுகளை நடந்தும்
வெளிர் நீலத்தை நீந்தியும்
வரைந்துவிட்டு உறங்குபவர்களே
ஒரு பொத்தானை அழுத்துவதின் மூலம்
ஒளிவேகத்தில் உலகைச் சுற்றிவிடுகிறேன்
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து
உற்றறியும் ஐம்புலனும்
ஒரே மாத்திரை வில்லையில்
எனக்குக் கிடைக்கின்றன
பதினேழாம் நூற்றாண்டில் பிறக்காத
துர்பாக்கியசாலியான நான்
இப்போது மெய்நிகர் நானாக உருமாறி
மெல்ல மெல்ல
ஆகாயத்திற்கு குடியேறிக்கொண்டிருக்கிறேன்
இன்னும் உழுதுண்டு வாழும் தந்தையார்
என்னை அண்ணாந்து பார்த்து மகிழ்கிறார்
நான் குனிந்து பார்க்கும்போது
இரு மெய்நிகர் கண்ணீர்த்துளிகள்
தோன்றாமற் தோன்றி
இல்லாமல் மறைகின்றன.
No comments:
Post a Comment