Oct 26, 2024

நான் பச்சோந்தி

பொன்வண்டுகள் பறந்த பிள்ளைப்பிராயத்தின்
ஈரங்கசிந்த முற்பகல்களில்
கொவ்வை படர்ந்த வேலிகளில்
பச்சோந்திகளின் ரசவாதத்தை அதிசயித்திருந்தவன்
சந்தர்ப்பவாதத்திற்கு அவற்றை உவமை சொன்னவனை
மனதின் கீழ்மைக்கான ஒப்புமையை
இயற்கையில் தேடிய
யாரோவொரு அவநம்பிக்கைவாதியாக சந்தேகிக்கிறேன்
நிறந்து நிறந்து
தகவமைப்புக்கு நீதி சொல்லும் பச்சோந்தியே
உன்னை வணங்குகிறேன்
ஏன் எனில்- நான்
துயரமான நாடகக்காட்சியில் கைதட்டி வைத்துவிடுகிறேன்
அறிவான காதலியிடம் சொல்லவேண்டியவற்றை
அழகுமிக்கவளிடம் சொல்லிவிடுகிறேன்
என் மேலாளரிடம்
அவரின் மேலாளரைப்போல் பேசுகிறேன்
எப்போதும் முதலில் பிடிபடுவனாக இருக்கிறேன்
ஆகவே நான்
உன்னிடம் யாசிக்கிறேன் இயற்கைத்தாயே…
வரும் வேறுகாலத்தில் என்னை பச்சோந்தியாக்கிவிடு
குழையாத ஒரு பாறையைப்போல்
இந்த வாழ்வில்
எங்கெங்கும் துருத்திக்கொண்டிருப்பதற்கு பரிகாரமாக
நான் துலக்க விரும்புவதெல்லாம்
உன்னோடு இயைந்த வர்ணங்களையே.

No comments: