கண் நரம்புகளில் விரியும் புலியின் கோடுகள்-புயனஸ் ஏரிஸில் மூன்று நாட்கள்
தென்னமரிக்காவில் உள்ள உருகுவேயின் தலைநகரான மாண்டிவீடியோவில் பணி புரிய நான் பணியாற்றும் மென்பொருள் நிறுவனத்தால் அனுப்பப்பட்டபோது இரண்டு காரணங்களுக்காக அதை பயன்படுத்திக்கொண்டேன்.ஒன்று,லத்தீன் அமெரிக்க இலக்கியங்களில் வாசித்திருந்த நிலப்பரப்பு மற்றும் அதன் மனிதர்களை காண்பதற்கான வாய்ப்பாகவும், இரண்டாவது போர்ஹேஸ் பிறந்து வாழ்ந்த அர்ஜெண்டினாவின் தலைநகரான புயனஸ் ஏரிஸ் செல்வதற்கானதாகவும். கிளம்புவதற்கு முன் என்னுடைய பயணத்திட்டத்தில் புயனஸ் ஏரிஸ் மற்றும் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ இரண்டு நகரங்களும் பிரதானமாக இருந்தன.முடிந்தால் மரியோ வர்கஸ் லோசாவின் பெருவும்.