நாயகன்
பகற்கனவுகள் குறித்த புகழ்பெற்ற கதைகள் என்ற சொற்றொடரை உள்ளிட்டுக் கூகிளில் தேடிக்கொண்டிருந்தபோது ஏதேச்சையாக வால்டர் மிட்டியைப் பற்றி அறிந்துகொண்டான் கார்த்தி. உடனடியாக அக்கதையின் படவடிவக்கோப்பைத் தரவிறக்கம் செய்து வாசித்தபோது கதை என்ற வஸ்து இதில் எங்குமே புலப்படவில்லையே என்று குழம்பினான். பெண்ணுடலின் அங்கங்கள் ஆபாசமாக கவர்ச்சியாகத் தெரியுமாறு படங்கள் வரையப்பட்ட வாராந்தரிகளின் கதைகள் மற்றும் மர்ம நாவல்கள், குடும்ப நாவல்கள் போன்றவற்றில் ஏற்கனவே கொண்டிருக்கும் பரிச்சயத்தோடு தற்சமயம் நவீன தமிழ் இலக்கியத்தின் வாசகனாகும் முயற்சியிலும் பயிற்சியிலும் இருக்கும் அவன் உடனடியாக தன் நண்பரும் நவீன கவிஞருமான போர்ஹேப்ரியனிடம் விசாரித்தான்.