ஒளிரும் நீல நாயின் கண்கள்
முதன்முதலில் நான் வாசித்த அசதாவின் படைப்பு பல ஆண்டுகளுக்கு முன் அவர் மொழிபெயர்த்து புது எழுத்து இணைப்பாக வெளிவந்திருந்த காப்ரியல் கார்சியா மார்க்குவெஸின் முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம் (குறு)நாவலாகும். ஒரே அமர்வில் வாசித்து முடிக்குமளவிற்கு அந்த மொழிபெயர்ப்பு சரளமானதாக இருந்தது. அவருடைய சொந்த ஆக்கங்களான வார்த்தைப்பாடு மற்றும் பிஷப்புகளின் ராணி ஆகியவற்றை வாசிக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. ஒரிரு இதழ்களுக்கு முந்தைய கல்குதிரையில் வெளியான அவருடைய இசைக்காத மீன்களின் அக்கார்டியன் சிறுகதை வெகுநாட்களுக்கு நினைவில் நிற்கக்கூடிய கதை. தற்போது நாதன் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் அவருடைய மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுப்பான நீல நாயின் கண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கதைகளாலும் செம்மையான மொழியாக்கத்தாலும் மிக முக்கியமான மொழியாக்கச் சிறுகதைத் தொகுதியாக வெளிவந்திருக்கிறது. முழுமையை விரும்பும் ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு நுணுக்கமான கவனத்தைக் கோரும் மொழியாக்கம் நிச்சயம் சவாலானதே. ஒவ்வொரு நிலமும் அதன் மொழியும் அச்சமூகத்தின் வாழ்வியலால், கலாச்சாரத்தால், அதன் வரலாற்றுப் பின்புலங்களால்...