தமிழ்ச் சிறுகதைகளில் மாயத்தன்மை
த மிழ்ச் சிறுகதைகளில் மாயத்தன்மை என்ற பார்வை மாயா யதார்த்தவாதத்தோடு தொடர்புடையதாக இருந்தாலும் அந்த வடிவ அடையாளத்துக்குள் மட்டும் நாம் உரையாடலை சுருக்கிக்கொள்ளப் போவதில்லை. இங்கே ‘ மாயா யதார்த்தவாதம் ’ என்பது பேச்சிற்கு வசதியான ஒரு குறிச்சொல்தான். மாயம், வினோதம், அற்புதம் போன்ற விஷயங்கள் கீழைத்தேயத்திற்கும் தமிழ்ச்சமூகத்திற்கும் புதியனவல்ல. நமது புராணீகங்கள், தொன்மங்கள், இதிகாசங்கள் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் போன்றவற்றின் வழியே நம் கூட்டு நனவிலியின் ஒரு அங்கமாகவே அவை இருக்கின்றன. ஆனால் மாயத்தன்மை ஊடுபாவிய கதைகள் எழுதப்படுவது தமிழ்ச் சிறுகதையின் வியாபகத்தை ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைவுதான். எண்பதுகளில் ஒரு வடிவமாக அறிமுகமான மாயா யதார்த்தவாதம் ஏன் வரவேற்புக்குரிய தனித்த பிரிவாக தமிழில் வளரவில்லை என்பதற்கான காரணங்கள் தனியாக ஆராயப்படவேண்டியது.