Posts

Showing posts from September, 2010

பரிசு

எப்போதும் பயணத்திலிருக்கும் நண்பனின் மகளுக்கு அவன் ஊரிலில்லாத நாளில் வரும் ஆறாவது பிறந்த நாளை சின்னதாய் கொண்டாடும் கருக்கல் மாலையில் சிரிப்பாக நிரம்பி தளும்புகிறாள் குழந்தை யாவரும் பரிசுகளோடு வந்திருக்கையில் வழியின்றி வலியோடும் வெறுங்கையோடும் போய்விட்டவன் பிரியத்தை எப்படி செலவின்றி பரிசாக மாற்றுவதென்று குழம்புகையில் எனக்கென்ன வாங்கினாயென்று கேட்கும் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து இதுதானென்றான்... அசங்காமல் அதை கையிலெடுத்தோடி அறிவியல் புத்தகத்தின் நடுப்பக்க மயிற்தோகைக்குள் வைத்துவிட்டுச் சிரித்தவளின் புன்னகையில் பெருகிய நதிக்குள் அவன் வெகு சந்தோஷமாய் ஒரு கூழாங்கல்லாய் மாறிப்போனான்