திரிவேணி
குயிலாத்தாள் (எ) மயிலாத்தாள் பொழுது உச்சிக்கு ஏறுவதற்கு முன்பே திண்ணைக்கு வந்துவிடுவாள். ஓட்டுச்சாய்ப்புக்குக் கீழே வெயில் திண்ணையின் மேல் ஏறியும் ஏறாமலும் அலைந்துகொண்டிருக்கும். முன்னாலிருந்த இரண்டு வீடுகளும் இடிந்து குட்டிச் சுவராகிவிட்ட பின்பு ஊரின் தலைவாசல் தெளிவாகத் தெரிகிறது. நினைவு தெரியத் தொடங்கும்போது அங்கே சிறு கொம்புகளாய் இருந்த வேம்பும் பூவரசும் காலத்தின் வடுதாங்கிப் பெரிதாய்க் கிளை பரப்பி நிற்கின்றன. விநாயகனுக்குக் கோவில் கட்டியபோது வேம்பை உள்வைத்து சுற்றுத் திண்ணையும் கோவில் வாசலில் நீண்ட கல் திண்ணைகளும் அமைத்த நாட்கள் நினைவுக்கு வந்தன.