நிழல் உலகம்
நிழலே நீ விலகிவிடு இருண்ட வளைக்குள் நான் தவழத் தொடங்கிவிட்டேன் சாத்தானின் சபை கூடிவிட்டது உன்னை நான் உருவெடுத்த காலங்கள் முடிந்துவிட்டன என்னிலிருந்து தப்பித்துப் போ அவர்களின் நீதி பரிசளித்த தழும்புகளால் என் தோல் சுரணையற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது மீட்சி மற்றும் புத்துயிர்ப்பைக் குறித்த அனைத்து நம்பிக்கைகளையும் இழந்துவிட்டேன் கடைசித்துகள் வரை நிர்மூலமாக்கப்பட்டு திரும்பச் சமைக்கப்படவேண்டியதாய் பூமியில் குற்றங்கள் மலிந்துவிட்டன மேலும் பிராயச்சித்தத்தின் பீடத்திற்கு திரும்பும் வழியை உலகம் மறந்துவிட்டது பிரபஞ்சத்தை மீளுருவாக்கவேண்டிய நேரத்தில் இந்தக் கடவுளர்களை வேறு காணவில்லை ஆகவே நிழலே என்னைக் கைவிடு எல்லை கடந்து போ அங்கே பொன்னுலகம் இருக்கும் பிறப்புக்கும் இறப்புக்குமிடையே துளி குருதியும் கேட்காத குற்றமழிந்த நிலம் அது நிர்வாணம் வெட்கத்தைத் தோற்றுவிக்காத காலம் அங்கே நிலவும் மண்ணுக்குத் திரும்பும் யாத்திரையை இப்போதே தொடங்கு நீ இயன்றால் என்னை அங்கே உருவெடு மெய்யுலகம் என்று அவர்கள் முழக்கும் இந்த நிழல் உலகத்தினுள் இதோ நான் பதுங்குகிறேன்