அக்கிளி அங்கேதானிருக்கிறது
வீட்டிலிருந்து காலடி வைப்பதே
முதல் மலையைக் கடப்பதாகிறது
இந்த நகர வழியில்
சங்கேதங்கள் ஒளிர்கின்றன
அதன் நடுவிலிருப்பது
வரலாற்றின் இருதிசைகளையும் பார்க்க
வசதியாக இருக்கிறது
கட்டடங்கள் அமைந்திருக்கும் கோணங்களையும்
மறியும் தார்ச்சாலைகளையும் காண்கிறேன்
பச்சை விழக் காத்திருக்கும்
அணைக்கப்படாத எந்திர உறுமலில்
உருப்பெறும் தாளலயம் புதியதாயிருக்கிறது
மனிதர்களின் பெருமூச்சொலிகளை
செவிமடுக்கும் போதும்
தள்ளுவண்டிக்கு எலுமிச்சைக் காப்புவைத்து
பூசை செய்யும் திருநங்கைக்கு
பயபக்தியோடு நாணயத்தைக் கையளிக்கும்
குறுவியாபாரியின் முகம் நோக்கும்போதும்
ரகசியங்களின் தொலிகள்
சற்றே உதிர்ந்தாலும்
சூரியன் முற்பகலைச் சமைக்கும் இக்கணத்தில்
மனக்களைப்பு பெருகிவிட்டது
இன்னும் ஆறுமலைகள் ஏழுகடல்கள் பாக்கியிருக்கின்றன
காமத்தைப் பருக்கவைக்கும்
எதிர்பாலுடல் அச்சிடப்பட்ட
பிரமாண்ட விளம்பரப்பலகையின் கீழே
நிழலுக்கு ஒதுங்கியபோது
எதிர்கொண்ட சோதிடக்கிளியிடம்
ஏழுகடலுக்கு அப்பாலிருந்து
ஒரு சீட்டை எடுக்கச் சொன்னேன்
இங்கிருந்தே ஒன்றை
பொறுக்கி வீசிவிட்டு
தன் கூண்டுக்குள்
முகந்திருப்பிக் கொண்டது
அது.
No comments:
Post a Comment