கையசைக்கும்போது
பேருந்தின் வேகத்தை
குறைக்கமுடியாத அளவிற்கு
கூட்டிவிடுகிறார் ஓட்டுனர்
வந்தமர்வதற்குள்
விருந்துச்சாப்பாட்டில்
சுவைமிகுந்த பதார்த்தங்கள்
தீர்ந்துவிடுகின்றன
மிச்சமிருந்த ஒரே தீக்குச்சி
சிகரெட்டைப் பற்றவைப்பதற்குள்
அணைந்துவிடுகிறது
பருவத்தின் கடைசிநாளிலேயே
போக வாய்த்தவன் மேல்
பழங்களுக்குப் பதில்
இலைகள் உதிர்கின்றன
தவழும்போது சிரிக்கும் குழந்தை
அள்ளி எடுத்தால் வீறிடுகிறது
புதிய அறிதலொன்று கிட்டத்தட்ட
வெளியரங்கமாய் தோன்றிவிட்டதென்று
குதூகலிக்கையில்
அது மீண்டும் புதிராகிவிடுகிறது
விரும்புகின்ற ஒன்றை
எப்போதும் நூலிழையில் தவறவிடுபவனை
இப்போது தணிவித்துவிட்டது காலம்
குறையொன்றுமில்லை
ஆம்-நான்
கைகளாலேயே மென்றுண்ணப் பழகிவிட்டேன்.
No comments:
Post a Comment