தசையுண்டு வாழும்
வேங்கையின் கண்களில்
அவ்வப்போது
நிழலாடிக்கொண்டேயிருந்தது
தேனுண்டு வாழும் வண்ணத்துப்பூச்சி
எங்கோவொரு ஊற்று
கண்திறந்த கணத்தில்
மொட்டு விரிந்த பொழுதில்
வேங்கை கண்டடைந்தது
வண்ணத்துப்பூச்சியின் மீதான
தன் காதலை
எல்லா நேசமும்
சமர்ப்பிக்கப்படவேண்டிய அவசியமில்லையென்று
வேங்கை உணர்ந்த கணத்தில்
அதனில் எஞ்சிப் பெருகியது
தூய காதலின் பாலொளி மட்டுமே
தன் காதல் வண்ணத்துப்பூச்சியை
கானகத்திடை எங்கேனும்
கண்டு கனியும்
வேங்கையின் கண்களை
பிரபஞ்சத்திகிரி
காதலை நோக்கிய நொடியில்
வண்ணத்துப்பூச்சி எதிர்நோக்கியது
குளிர் மேவிய கானகத்திற்குள்
வேங்கையின் கண்கள்
இரு வண்ணத்துப்பூச்சிகளாக
உருமாறிப் பறப்பதை கண்டு
அக்கணமே உயிர் நீங்கினர்
கானக மறுகோடியில் ஒளிந்திருந்த
வண்ணத்துப்பூச்சியின் தேவதைகள்.
No comments:
Post a Comment