பாவனைகளிலேனும்
மகிழ்வை நிரப்பவியலாமல்
தாழ்நீக்கும் ஓசைமுன்
துயரங்களோடே நிற்கிறேன்
உதிர்ந்துகிடக்கும்
பறவைகளின் இறகு
அலையொதுக்கிய கிளிஞ்சல்கள்
மழை மறுநாளின்
மொட்டு பாப்பாத்திகளென
எதையேனும் எடுத்துவரும்
சிறுவனின் நேர்மையுமில்லை
இருந்தாலும்
உன் அன்பின் நதிமுகம்
இருதுளி கண்ணீருக்குப்பின்னால்
கரைகளற்று பொங்குகிறது
இயல்பு திரும்பிவிட்ட நாளில்
உறக்கத்தில் மிளிரும்
உன் புன்னகையை காணுமிரவில் மட்டும்
அரவமின்றி - இந்தப்
பூனை வெளியேறும் காரணம்
வெளியும் அறியாதது
ஒருக்களித்து சாத்தியிருக்கும் கதவு
காத்திருக்கத் துவங்குகிறது
பூட்டப்படுவதற்கும்
தட்டப்படுவதற்கும்.
No comments:
Post a Comment