Oct 20, 2024

பருந்து

எதிர்வீட்டில்
மூன்றாவது தளத்தின்
வெளிறிய இருளடர்ந்த
பால்கனியில்
பொருத்தப்பட்ட ஓவியமென ஒருகணமும்
தத்தி நடைபழகும் புறாவென
மறுகணமும் அவளிருந்தாள்

விளக்கணைக்கப்பட்ட
அறையுள்ளிருந்து
பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு
மேற்கசிந்த மஞ்சள் ஒளியில்
அவள் முகம் சுடர்வதாகவே தோன்றியது

புலன் பெண்டுலம்
காதலுக்கும் காமத்துக்கும்
இடையோடிய நொடியில்
மூடப்பட்டிருந்த ஜன்னலை
கேள்விக்குறியாய்
தொட்டு நீண்டதவள் பார்வை

கண்ணாடி ஜன்னலை
வழுக்கிக் கடந்து
தோள் வந்தமர்ந்தன
இரண்டு புறாக்கள்

மற்றுமொரு பருந்து.

No comments: