சலனமற்ற கரும்பாறையாய்
உறைந்த இவ்விரவில்
விளிம்பில் நுரைத்திருக்கும்
மதுக்கோப்பைக்குள்
மிதக்கும் கடலை
ஓர் உன்னதத் துய்ப்பாளனாய்
விழுங்குகிறேன்
சூடேறும் செவிநுனிகளைக் கிழித்தவாறு
கிளம்பிப் பறக்கின்றன
ஓராயிரம் பறவைகள்
கடைசித் துளியையும்
கடந்த கணத்தில்
விரிந்த வெளியில்-அவையென்னை
வீசி விளையாடுகையில்
முடிவிலா தரிசனங்களை
கண்டு மயங்கியவனுக்கு
விடியலில் மிச்சமிருந்தவை
உதிரிசிறகுகளின் வெண்புன்னகைககள் மட்டுமே.
No comments:
Post a Comment