Oct 20, 2024

கூண்டின் அழைப்பு

பால்யத்தின் அமுதத்தாரைகள்
வற்றியபோது
எல்லா கனவுகளும்
செல்லரித்துப் போயின

இயலாமையின் மாயக்கரங்கள்
செவியதிர அறைந்துகொண்டிருக்கின்றன.

வெப்பமிகு இரவுகளில்
துயரம்
சுவர்ப்பல்லியின் இருப்பாய்
தன்னைக் காட்டுகிறது.

கனவின் பூக்களை
முந்தைய புயல் பிய்த்தெறிந்தது
இன்றைய புயல்
வேர்களைக் களவாட
நாளைய புயல் காத்திருக்கிறது
விதைகளைத் தின்ன

பூட்டப்படாத கூண்டுகளினுள்ளிருக்கும்
சிறகற்ற பறவைகள்
இடைவிடாத போதனைகளால்
எனக்கான அழைப்பை விடுக்கின்றன.

விரிந்த வெளியை
ஒரு கணம் வெறித்து
உதிர்க்கத் துவங்கினேன்
நானுமென் சிறகுகளை.

No comments: