Oct 20, 2024

என் மிருகம் பற்றிய குறிப்புகள்

உள்ளொரு மிருகம் வளர்த்தேன்
கூரிய நகங்களோடும்
குரூரம் மிக்கதாயும்

புகழுரைத்தவன் பாதங்களில்
வருட வைத்தேன்
என் மிருகத்தின் நாவை

பின்னால் இகழ்பவரிடம் காட்டினேன்
இடுக்குகளில் சதைத்துணுக்கு படிந்த
அதன் கூரிய பற்களை

வீழ்த்த நினைத்தவர்
கழுத்தைக் குதற
ஏவினேன் என் மிருகத்தை

அவ்வப்போது வேண்டுமென்றே
என் மிருகம் அவிழ்த்து
சுற்றம் பயமுறுத்தினேன்

மெல்லத் தன் வலிமை
கண்டுகொண்ட
என் மிருகத்திற்கு
இப்பொழுதெல்லாம் தேவையாயிருக்கிறது

என் குருதியும்.

No comments: