உருண்டு விளையாடிய
தெருவும் புழுதியும்
காணக் கிடைக்கவில்லை
கண்களை நெருடுகிறது
கான்கீரிட் தெருக்கள்
நெடிய மரபைக் கொன்று
எழுந்து கொண்டிருக்கின்றன
வீடுகளைச் சுற்றி
புதிதாய் சுற்றுச்சுவர்கள்
ஆண்கள் யாரும்
வெற்று மார்போடு
தெருவில் நடப்பதில்லை
வடகமிட்ட வாசல்களில்
வெய்யில் காய்கிறது
விரிந்த காடுகளில்
சிறார்கள்
பொன்வண்டு பிடிப்பதில்லை
பட்டாம்பூச்சிகள் பிடித்து விடுவதில்லை
அகரம் கற்ற பள்ளி
வெளவால்களின் வசிப்பிடமாய்
திருவிழாக்களுக்கு நடனமாட
திரைத்தாரைகைகள் வருகிறார்கள்
குப்பைகளில் கிடக்கின்றன
வாராந்தரிகளில் விளம்பரத்தப்படும்
ஆணுறைகள்
வெளியேறிக் கொண்டிருக்கிறான்
கருப்பராயன்.
No comments:
Post a Comment