பச்சையம் நிறைந்த
தென்னிலைகள் ஆடும்
பழங்குடியினர் நடனமொத்து.
உற்சாகம் பூசிக்கொள்ளும் காற்று
மரங்கள் மாறித்தாவும்
காற்றுவெளியில்
ஓவியங்கள் வரைந்தபடி
பூக்கள் உதிரும்
சிறுதூரம் கடக்க
வால்தூக்கி வேகமெடுத்தோடும்
அணில்கள்
கண்ணாடிக்கயிறாய்
நீர் வாய்க்கால்
நனையும் உள்ளங்காலில்
நதிக்குளிர்மை
வேலி மீதமர்ந்து
மழையறிவிப்பு செய்யும்
செம்போத்துகள்
தனிமைகளில்
அத்தளிருதடுகள் கொடுத்த
பூப்பு வாசம்
அகலாதிருந்த முத்தங்கள்
இருளடர்ந்த நகரத்துச் சந்தொன்றில்
மனசில் நுரைதள்ள
பொசிந்து கொண்டிருக்கிறேன்
சிறுநீரும் கண்ணீரும்
No comments:
Post a Comment