Oct 20, 2024

பால்யம்

அன்றைய
அந்திப்பொழுது
வீடு திரும்புதலில்
படிந்திருக்கும் அழுக்கு
உடம்பில் மட்டும்

விளையாட்டில் விட்டுக்கொண்ட காய்
எப்படியும் பழுத்துவிடும்
மறுநாள்

தூக்கிச் சொருகிய சேலையோடு
வெளுத்த சலவைக்காரியின்
வெண்தொடைகளை
விகல்பமின்றி பார்த்ததெல்லாம்
சிறுநீரில்
விந்தனுக்கள் கலவாத காலங்களில்

உள்ளம் போகும் தடத்தில்
உதைபந்தனெ இருந்த நாவு
இன்று சொற்களைத் தேர்கிறது
திறமையானதொரு
சதுரங்க ஆட்டக்காரனின்
காய் நகர்த்தலாய்

பகிர்தலையும் புன்னகையையும்
புதைத்த இடத்தில்
மீந்த எலும்புத்துண்டுகளாய்
குதூகலமும் புனிதமும் நிறைந்திருந்த
அவரவர் பால்யம்.

No comments: