விசேஷ நாட்களில்
ஆலய வாசலில்
பிச்சைக்காரர்களின் கோடியில்
மரபோர்டில்
பொருத்தப்பட்ட கேன்வாஸ்களோடு
காத்திருக்கிறான்
கடவுளை வரைபவன்
வேண்டுமென்று
அடம்பிடிக்கும் குழந்தையின் தீவிரத்தோடு
நின்றிருக்கும் பக்தர்களுக்கு
விரைவான கோடுகளில்
வரைந்து சுருட்டி நீட்டுகிறான்
தம்முகத்தின் சாயல்
அதிலிருப்பது கூட அறியாமல்
பவ்யம் கொண்டு
தாங்கிப்போகும்
பக்தர்கள் கண்டு
கருவறை அதிராமல்
குலுங்கிச் சிரிக்கிறான்
கடவுள்
அவன் சிரிப்பை
தன் கோடுகளில்
தோய்த்துக்கொண்டிருக்கிறான்
கடவுளை வரைபவன்
No comments:
Post a Comment