Oct 20, 2024

நடனம்

சதங்கை பூட்டிய இரவின்
ஆனந்தச் சதிரை
அத்தனை வெட்கம்
பூசிய வானம்
உடலைக் கண்களாக்கி ரசிக்கிறது

களி நுரைக்கும் இவன்
தன் அறைகூவலுக்குப் புறமோடிய
கடவுளர்களை இகழ்ந்துவிட்டு
திசைகளெங்கும் முகிழ்விக்கிறான்
அன்பின் பனித்துளிகளை

விரகம் ஏறிவிட்ட இரவு
வாவென்று அழைக்க
தனித்தாடிய அதற்கு
இவன் துணையாக

மரம் நின்றாடியது
காற்று சுழன்றாடியது
வானம் கவிழ்ந்தாடியது
மண் ஆடாமல் ஆடியது

கடவுளர்களே மறைந்தாடினர்.

No comments: