Apr 26, 2026

ஒன்று, எப்போதும் அதன் லட்சிய வடிவத்திலேயே நிகழ்வதில்லை


தற்குறி/தற்குறிக் கூட்டம் என்று வசை பாடப்பட்டாலும் நிகழும் தமிழக அரசியல் வரலாற்றின் உந்துவிசை விஜய்தான். சாதகமாகவோ பாதகமாகவோ அவர் ஒரு phenomenon. சுயவிருப்பத்தின் பேரில் கட்சி தொடங்கினார் அல்லது வலதுசாரி சக்திகளின் கள்ளக் கூட்டாளியாக இறக்கிவிடப்பட்டிருக்கிறார் என்பதெல்லாம் இரண்டாம்பட்சமானவை. சொகுசான அரசியல்வாதி, எழுதிக் கொடுத்ததைப் பேசுகிறார், சுய சிந்தனைத் இல்லை என்ற விமர்சனங்களில் உண்மையுண்டு. ஆனால் ஒரு ஆளுமையின் வெளிப்பாடு அல்லது ஒரு நிகழ்வு என்பது அதன் இலட்சிய வடிவத்திலேயே (ideal state) எப்போதும் நடப்பதில்லை (விடுதலைச் சிறுத்தைகளின் மீது இருபதாண்டுகளுக்கு முன்வைக்கப்பட்ட விமர்சனத்தை நினைவு கொள்ளலாம்). தோற்றமும் அரைகுறையாகவும் பிழைகளோடு இருந்தாலும் லட்சிய நிலை நோக்கி முன்னகர்வது முக்கியமானது. தூய்மையானவர்களே அரசியலுக்கு வரவேண்டும் என்பது இன்றைக்கு காகிதத்தில் மட்டும் எழுதப்பட்டிருக்கும் லட்சிய நிலை. இன்றைய நடைமுறை அரசியலில் தூய்மைக்கு என்ன தொடர்பு இருக்கிறது? ஆனால் ஒரு முரணாக, இங்கு ஏற்கெனவே ஊழல்வாதிகளாக, கறை படிந்தவர்களாக இருப்பவர்கள், தவெக வின் வருகையை, அதன் இருப்பைக் கண்டு அஞ்சி இணையவெளியில் வசைப்பகடியை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

இன்றைய அரசியல் அனைவருக்கும் சமமான வாய்ப்புள்ள களமாக (level playing field) இல்லை. தலைமைப் பீடங்களில் பெரும்பாலும் அதிகாரம் வாரிசுகளுக்கே கைமாறுகிறது. வாரிசு அரசியல் கூடாது என்றால் எல்லோரும் பொச்சில்தான் சிரிக்கிறார்கள். உள்ளீடற்ற வாரிசுப் பொக்குகளே வரும் தலைமுறையின் தலைவர்களாக ஊடக பலத்தாலும் வியூக வகுப்பாளர்களாலும் ஊதிப் பெருக்கப்படுகிறார்கள். புது ஆட்டக்காரன் உள்ளே நுழைய முடியாது. நுழைந்தாலும் நீடிக்க முடியாது. தேர்தல் களத்தில் மட்டும் மோதல் நிகழ்வதில்லை. ஆயிரக்கணக்கான வாடகை வாய்களின் வழியே சிந்தனை மயக்கங்கள் (Narrative) உருவாக்கப்படுகிறது. ’தற்குறிகள்’ போன்ற வீரியமான பதம் புழங்க விடப்படுகிறது. ’தோழர்கள்’ கூட இணைய அணிகளின் துணை நடிகர்களாகி ட்ரோலர்களாக மாறிவிட்டார்கள்.

இந்த இளைஞர்கள் நம் மாநிலத்தின், நம் வீட்டின் பிள்ளைகள் அல்லவா தமிழ்ப் பிள்ளைகள் அல்லவா? அவர்கள் பிழையே செய்பவர்களாக இருந்தாலும் அவர்களை ஏன் ’அரக்கக் குஞ்சுகளாகச்’ சித்தரிக்க வேண்டும். நீங்கள் நேர்மையானவராக இருந்தால் தற்குறிகள் என்று இகழ்வதைவிட உங்கள் கொள்கைக்கும் கோட்பாட்டுக்கும் மடைமாற்றும் காரியத்தில் ஈடுபடவேண்டும். வாக்கு வங்கி என்ற கணக்கில் மட்டுமே பார்ப்பதால் தான் இதெல்லாம் நிகழ்கின்றன. இதேதான் நாம் தமிழர் கட்சியில் தம்பிகளுக்கும் எளிய தமிழ்ப் பிள்ளைகளுக்கும் நிகழ்ந்ததைப் பார்க்கும்போதும் புதியவர்களை கோமாளி ஆக்கிக் காட்டும் பழம் பெருச்சாளிகளின் தந்திரம் இது என்பது தெளிவாகத் தெரிகிறது.

மக்கள் சேவை, கொள்கை கோட்பாடு எல்லாம் இன்றைய அரசியலில் தோற்ற வசதிக்காக இருக்கும் துணை விஷயங்கள் (auxiliary). அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதுதான் அதன் இதயத்துடிப்பு. அதிகாரத்தை எப்படிக் கையில் வைத்திருப்பது? அதற்கு ஆள், அம்பு, படை, பரிவாரம் எனப்படும் Muscle power வேண்டும். தமிழகத்தில் இரு கழகங்களும் அதை ஏற்கெனவே கையில் வைத்திருக்கின்றன.

அதிகார அரசியலுக்குத் தேவையான Muscle power உடன் விஜய்யின் வருகை நிகழ்ந்திருப்பதுதான் இவர்களைப் பெரிதாக அச்சுறுத்துகிறது. பதட்டப்படுத்துகிறது. நான்கு முக்கியமான விஷயங்கள் 1. அவருடைய வயது, மிகச் சரியான காலகட்டத்தில் நுழைந்திருக்கிறார். 2. அபரிமிதமான நாயக பிம்பத்துடனமும் பெரும் ரசிக பட்டாளத்துடனும் களத்துக்கு வந்திருப்பது 3) விஜய் மூலமான Return on Investment (ROI) மீது நம்பிக்கை வைத்து அவருக்கு பணம் செலவழிக்க தனிநபர்களோ குழுவோ இருக்கிறார்கள். 4. தவெக கட்சியின் மேல்மட்டச் செயல்பாட்டில் ஒரு கார்ப்பரேட் தெளிவு இருக்கிறது. இந்த Muscle power உடன் விஜய் களத்தில் இல்லாவிட்டால் அவர் எளிதாகக் கசக்கித் தூக்கி வீசப்பட்டுவிடுவார். கமலஹாசனைப் போல அரசியலில் துணை நடிகர் ஆகிவிடுவார். அடிப்படைவாதம் கலந்த தமிழ்த்தேசிய உட்டோப்பிய ”அன்பான சர்வாதிகாரத்தை” முன்வைக்கும் சீமானால் இந்த Muscle power ஐ இன்னும் முழுமையாகத் திரட்ட முடியவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

நேற்று ஒரு அதிமுக நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இந்த் தேர்தலுக்காக கடந்த ஒருவருஷமாக அதிமுக எவ்வளவு நுணுக்கமான கட்டமைப்போடு களத்தில் தீவிரமாக (குறைந்தபட்சம் கொங்குப்பகுதியில்) வேலை செய்திருக்கிறது என்ற விவரங்கள் ஆச்சரியமூட்டின. தேர்தல் வேலை என்று வந்துவிட்டால் திமுக மட்டும் வெள்ளைக்காரன் இல்லை, அதிமுகவும்தான் என்ற உண்மை புரிந்தது. ஆனால் ஊடகங்கள் திமுகவை மட்டும் பேசுகின்றன. இந்தக் கட்டமைப்பு, செயல்திறன், முதிர்ச்சி இவற்றை எல்லாம் தவெக அடைய இன்னும் பல வருஷங்கள் கடினமாக உழைக்கவேண்டும் என்பது நிதர்சனம். இன்றைய தேதியில் விஜய்யும் அவருடைய கட்சியும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் முதிர்ச்சியை அடையவில்லை. அவருடன் இருப்பவர்களில் ஒருவரும் நம்பிக்கைக்குரியவராகத் தெரியவில்லை. கள யதார்த்தம் புரிந்தவராக விஜய் எப்போது மாறுவார் என்பது தெரியாது. கரூர் துயரம் அவருக்குக் கூடுதல் பொறுப்புணர்வை வழங்கி இருக்கிறது என்பதற்கான தடயங்கள் தெரியவில்லை. சீமானைப் போல vocal ஆகச் மாறவும் சாத்தியமில்லை. ஆனால் இத்தனைக்கும் இடையில் அவர் வழியே தமிழக அரசியல் வரலாற்றில் இன்றைக்கு ஒரு churn நிகழ்கிறது. இந்தத் தேர்தலில் அவர் underdog தான். ஆனால் விஜய்க்கு Muscle power சாத்தியமாகி இருக்கிறது. அவர் அரசியலில் வீழ நேர்ந்தால் அது அவருடைய பலவீனங்களால் மட்டுமே நிகழும், ஒருபோதும் மற்றவர்களின் பலத்தினால் அதைச் சாத்தியப்படுத்த முடியாது.

No comments: