மனப்பிறழ்வு வாழ்க்கையின் வெவ்வேறு காலங்களையும் இடங்களையும் சம்பவங்களையும் இணையாக வைத்து சிதறுண்ட தொனியில் சொல்லப்பட்டதுபோல தோற்றங் கொடுத்தாலும் வாசிப்புக்குப் பிறகு அர்த்த முழுமையையும் காட்சி முழுமையையும் கொடுக்கக்கூடியதாகவே அமைந்து வந்திருக்கிறது பிறழ் குறுநாவல்.
நம்முடைய ஒழுக்க நெறிமுறைகளின் பின்புறத்தில், குறிப்பாக பாலுறவு சார்ந்த அமைப்பின் திரைக்குப் பின்னால் உடல் சார்ந்த ஒழுக்கமீறல்களும் விலக்கப்பட்டவையும் தொடர்ந்து நிகழவே செய்கின்றன. வெவ்வேறு விதமான தீவிரங்களில் அத்துமீறல்கள் நிகழ்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அந்த அத்துமீறல்களுக்கு எந்த அர்த்தத் தொனியும் கொடுக்காமல் “உடல் சார்ந்த காரியமாகக்” கருதி கடந்து சென்றுவிடுகிறார்கள். பலருக்கு அவை ஆழமான மனச்சிதைவை உருவாக்குகின்றன. மனச்சிதைவு ஏற்பட்டாலும் அமைப்புக்கு வெளியே தள்ளப்பட்டுவிடும் அச்சத்தில் அதை மறைத்துக்கொண்டு திரைக்கு முன்னால் நடமாடப் பழகிவிடுகிறார்கள். சிலர் மெய்யாகவே அமைப்புக்கு வெளியே தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.
பிறழ் நாயகனின் மனச்சிதைவுக்கு அடிப்படையான காரணமாக அருவெறுப்பைச் சொல்லலாம், பாலியல் இன்ப நுகர்ச்சியில் விலக்கப்பட்ட செயல்முறை, இன்னும் பாலியல் பிரக்ஞையை அடைந்திருந்த அவனுடைய சிறுபருவ உடலின் மீது ஒருபால் அத்துமீறலாய் பிரயோகிக்கப்படும்போது அதன் உடனடி எதிர்வினையான அருவெறுப்பையே அவன் அடைகிறான். ஏனெனில் நம்முடைய பாலியல் ஒழுக்கத்தைக் கட்டமைப்பதில் அருவெறுப்புக்குப் பெரிய பங்கிருக்கிறது. விலக்கப்பட்டவை மீதான அருவெறுப்பு குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டி வளர்க்கப்படுகிறது. ஒருவேளை அவனுடைய உடல் பாலியல் விழிப்பை அடைந்த பருவத்தில் அத்துமீறல் நிகழ்த்தப்பட்டிருந்தால் அவன் ஆழமான மனச்சிதைவிலிருந்து தப்பித்திருக்கக் கூடும்.
பிறகு இந்த அத்துமீறலுக்கான ஆற்றுப்படுத்தலைத் தேடிச் செல்லும் பெண்ணின் உடலாலும் திரும்பவும் அத்துமீறலுக்கு உள்ளாகிறான். இந்த இரண்டு அத்துமீறல்களிலும் ’குட்டையன்’ என்ற பட்டப்பெயரால் விளிக்கப்படும் அவனுடைய உடல் ஆதிக்கப்படுத்தக்கூடியதாகவும் கையடக்கமானதாகவும் இருந்திருக்கிறது. அழிக்க முடியாத ஒன்றாக அத்துமீறல் அவனுள் பதிந்து நினைவில் திரும்பத் திரும்ப நிகழும்போது அவன் சிதைவடையத் தொடங்குகிறான்.
செத்துப்போ செத்துப்போ என்று அவன் காதில் கேட்கும் குரல் யாருடையது? அது நம் எல்லோருக்குள்ளும் சமூகம் ஊட்டி வளர்த்திருக்கும் புனிதப் பாவனையின் குரல்தான். தனக்கு மீட்சியளிக்கும் என்று அவன் நம்பிய அரசியலும், தத்துவம் ஒன்றாய் நடைமுறை வேறாய் பிறழ்வடைந்து அவனைக் கைவிடுகிறது.
நிகழ்வாழ்க்கை சகிக்க முடியாததாக மாறுகையில் மருந்துகளால் தொடர் உறக்கத்தில் ஆழ்த்தப்படுகிறான்.”இறப்பில்தான் அனைவரும் விழித்திருக்கிறோம், எனக்கு விழித்திருந்து செய்ய நிறைய வேலை இருக்கிறது” என்ற இடத்தை இறுதியாக அடைகிறான். அருவெறுப்புக்கும் புனிதத்துக்கும் இடையே குறைந்தபட்சம் தன்னளவிலான சமரசத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தால் அவன் தப்பித்துக்கொண்டிப்பான்.
இந்திய சமூகம் ஒழுக்கத்தையும் தூய்மையையும் உடலிலிருந்து ஒருபோதும் நீக்கிவிடமுடியாதவாறு சேர்த்துப் பிணைத்துவிட்டது. அவனால் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடிந்திருந்தால் உள்ளிருந்த குரல் செத்துப்போ என்பதற்குப் பதில் ஒருவேளை வாழச் சொல்லியிருக்கக்கூடும்.

No comments:
Post a Comment