முதல்வரின் தனிச் செயலராக (அரசியல் பிரிவு) ராதன் பண்டிட் வெற்றிவேல் என்ற ஜோதிடர் நியமிக்கப்பட்டது சமூக ஊடகங்களில் சர்ச்சையாகி இருக்கிறது. இவர் தவெகவின் செய்தித் தொடர்பாளர் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக இத்தகைய பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும்போது அரசின் விதிகளும் வழிகாட்டுதல்களும் நெறிமுறைகளும் என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த நியமனத்தைக் காணும்போது பொறுப்புக்கு வருகிறவரின் கல்வி மற்றும் நிர்வாகத் அனுபவம் ஆகிய தகுதிகளுக்கு அப்பால், இது முழுக்கவும் முதல்வரின் அதிகாரத்தால் நியமிக்கப்படக்கூடிய பதவியாகத் தெரிகிறது.
பொதுவாக அரசு எந்திரம் என்பது ஒரு பொருள்முதல்வாத அலகு. தர்க்கமும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் (rationality and scientific approach) அதன் செயல்முறைக்கு மிக அடிப்படையானவை. அது பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதால் அது எந்தவொரு மதம், ஆன்மிகம் மற்றும் சமூக நிறுவனங்களின் செல்வாக்கின்றி அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ள நெறிமுறைகளின்படி செயல்படவேண்டும்.
ஜோதிடம் என்பது ஒரு கருத்து முதல்வாத அலகு என்பதால் அத்தகைய அனுபவப் பின்புலத்தில் இருந்து வருகிறவரின் நியமனம் விமர்சனத்துக்கு உள்ளாவது இயல்பே. மக்கள் நலன், நெறிமுறைகள், விதிகள், தரவுகள், நிர்வாக முன்னனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கவேண்டிய அரசின் கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகளில் இந்த நியமனமானது ஏதேனும் கருத்துமுதல்வாத ஆதிக்கத்தைச் செலுத்துமானால் அது ஆபத்தானது. ஒரு அரசு எப்போதும் தரவுகளின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தையே Evidence-based policy making (EBPM) பின்பற்ற வேண்டும்.
ஆனால் இன்றைய உலகின் பெரும்பான்மை, கருத்துமுதல்வாத சமூகம்தான். பொருள்முதல்வாதிகளின் எண்ணிக்கை வெகு குறைவு. அதிலும் இந்திய சமூகத்தின் வாழ்க்கையில் கருத்துமுதல்வாதப் பண்புகள் ஆழ ஊடுருவியிருக்கின்றன. இடதுசாரித் தோழராக இருப்பார், ஆனால் கெடா வெட்டி பொங்கல் வைப்பார். வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்புக்காக அதிநவீன விமானம் இறக்குமதி செய்யும்போது அதன் டயரில் அரசாங்கம் எலுமிச்சை பழம் வைக்கும், செயற்கைக்கோள்கள் நல்ல நேரத்தில் ஏவப்படும்.
இன்றைய பெரும்பான்மையான இந்திய மற்றும் தமிழ்ச் சமூகம் முழுக்கவும் கருத்துமுதல்வாதத்தின் செல்வாக்கில் இருக்கிறது. நாத்திகம் வலுவிழந்துவிட்டது. கடவுள் மறுப்பு என்பது ஏறக்குறைய கிடையாது, கடவுளின் இருப்பை முழுக்க ஏற்கவோ மறுக்கவோ முடியாது என்று சொல்லும் அஞ்ஞானவாதிகளின் (agnostic) எண்ணிக்கை வேண்டுமானால் கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம்.
அதேபோல் இன்றைய மக்களின் வாழ்க்கையில் ஜோதிடம் வீரிய செல்வாக்கைக் கொண்டிருக்கிறது. பெருங்கோடீஸ்வரர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை, கலைஞர்கள், அறிவுஜீவிகள் உள்ளிட்டு ஜோதிடத்தில் நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். குடும்பத்திலும் தொழிலும் நல்ல நேரம் பார்க்காமல் எந்தக் காரியமும் நடப்பதில்லை. ஜோதிடரை நம்பி வீழ்ந்தோர் பலரையும் மீண்டோர் சிலரையும் நம் சுற்றத்தில் பார்க்கிறோம். தேர்தல் காலத்தில் யார் முதல்வர் ஆவார் என்று ஜோதிடத்தின் அடிப்படையில் கணித்துச் சொல்லும் விளையாட்டுக்கள் நடந்தாலும் அவை பெரும்பாலும் பொய்த்துவிட்டன. என்னைப் பொறுத்தவரை மனிதர்களின் நிறைவின்மையே ஜோதிடத்தை நோக்கி ஓடவைக்கின்றன. ஜோதிடத்தை நம்புவதும் நம்பாததும் தனிமனிதர்களின் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் ஒரு அரசு எப்போதும் கருத்துமுதல்வாத நிறுவனமாக மாறக்கூடாது.
ஆனால் உண்மையில் நம்முடைய மத்திய மற்றும் மாநில அரசுகளின் எந்திரங்கள் மதசார்பற்ற, பொருள்முதல்வாத நடைமுறைகளைக் கொண்டிருக்கின்றனவா? தங்களுடைய சமூக மற்றும் தனிவாழ்க்கையில் கருத்துமுதல்வாதிகளாக இருப்பவர்கள் பங்கேற்றிருக்கும் அரசு எந்திரத்தில் அவர்கள் பொருள்முதல்வாதிகளாக இருக்கிறார்களா? எனக்குத் தெரிந்த அளவில் இந்திய கார்ப்பரேட்டுகளில் இந்து மத மென்சார்பு உண்டு. இதை ஒரு எளிய கேள்வி மூலம் கேட்கிறேன், புதிய அரசுக் கட்டடம் எழுப்பப்படும்போது அங்கு பூமி பூஜை போடப்படுகிறதா அல்லது எந்தச் சடங்குகளும் பின்பற்றப்படுவதில்லையா? மாநில மத்திய அரசு நிர்வாகத்தில் அனுபவமுள்ள நண்பர்கள் இதை விளக்கலாம்.
No comments:
Post a Comment